சென்னையை புதிய உயரத்திற்கு கொண்டு போகும் "ப்ராஜெக்ட்".. எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.. அடிதூள்
சென்னை: பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மக்களின் துரித போக்குவரத்திற்கான மெட்ரோ பாலம் அமைப்பதற்கான நில சோதனை எடுக்கும் பணிகள் விரைவில் நடக்க உள்ளன.
பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மக்களின் துரித போக்குவரத்திற்கான மெட்ரோ பயண சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிவிடம் சென்னை மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்து உள்ளது.
இதன் ஒரு கட்டமாக பரந்தூரில் மொத்தம் 2 மெட்ரோ நிலையங்கள் வர உள்ளன. உள்ளூர் விமான நிலைய பகுதிக்கு அருகே ஒரு ஸ்டேஷன், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஸ்டேஷன் என்று இரண்டு ஸ்டேஷன்கள் வர உள்ளன.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை பெருந்திரள் மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரை செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை (Detailed Feasibility Report), தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப.விடம் , அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான திரு. மு.அ.சித்திக், இ.ஆ.ப., சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று (04.01.2024) சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை பெருந்திரள் மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின் (DFR) முன்மொழியப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
1. வழித்தடத்தின் மொத்த நீளம்: 43.63 கி.மீ
2. பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள்: 19 (தோராயமாக)
3. மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ 10,712 கோடி (தோராயமாக)
பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பெருந்திரள் மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரைக்கிறது. விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள் மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும்.
புதிய விமான நிலையம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது இங்கே கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்கும். ஆனாலும் சென்னை விமான நிலையம் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.
2017-18ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது.
ஏன் புதிய விமான நிலையம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு கொஞ்சம் வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.
Source: oneindia.com